Thursday, July 20, 2006

நீ்ங்களும் கைவிட்டு விட்டீரோ!!


கனத்த மனதுடன் உங்களைக் கேட்கிறேன்
கனிந்த மனதுள்ள உங்களைக் கேட்கிறேன்

படித்த மனிதரே உங்களைக் கேட்கிறேன்
பாரினில் புகழ்பெற்ற உங்களைக் கேட்கிறேன்

இளகிய மனதது உங்களுக்குள்ளது
இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது

பச்சை இலையதன் காடுகள் காப்பவர்
பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர்

விலங்கை விடவும் கேவலமாகிய
விசயங்கள் ஈழத்தில் விஞ்சிக் கிடக்குது

பச்சைக் குழந்தை செத்துக் கிடக்குது
பாகம் பாகமாய் வெட்டிக் குவிக்குது

நித்தம் நித்தமிங்கு சாவுகள் நடக்குது
நினைத்திடாத பல கேவலம் நடக்குது

உங்கள் கண்களில் ஏன்படவில்லை
உங்கள் நெஞ்சினை ஏன்தொடவில்லை

எங்கள் இனமது ஏதிலியான
எதுவும் அடைந்திட அருகதையற்ற

செத்துப் போகவே பிறந்த இனமென்று
செய்வதென்ன இனிஇங்கு உள்ளதென்று

எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டால் பொதுமென்று
எண்ணி நீங்களும் கைவிட்டு விட்டீரோ

19 comments:

இயற்கை நேசி|Oruni said...

//இளகிய மனதது உங்களுக்குள்ளது
இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது

பச்சை இலையதன் காடுகள் காப்பவர்
பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர்//

:-(

தமிழினி said...

நன்றி இயற்கை நேசி.

வலைப்பூவிலும் கைவிட்டு விட்டார்களோ என்று நினைத்தேன்.
இல்லை!

மணியன் said...

ஈழத்தின் வலி புரிகிறது; வழி தெரியாமல் விழிக்கிறோம் :(

ஈழபாரதி said...

எங்களது உண்மையான் வலியைகூறும் கவிதை,
பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ, அனைவரும் படித்துக்கொண்டுதான் இருப்பார்கள், உங்களுக்கு தெரிந்ததை, நீங்கள் அறிந்ததை பதித்துக்கொண்டே இருங்கள், ஏனெனில் எங்கள் வலிகள்,தகவல்கள்,உண்மைசம்பவங்கள் அனைவருக்கும் போய்சேரவேண்டும், உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

தமிழினி said...

//ஈழத்தின் வலி புரிகிறது; வழி தெரியாமல் விழிக்கிறோம் :( //

தங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி மணியன்.

நாமக்கல் சிபி said...

உயிரிழந்து கிடக்கும் எம் உறவுகளைப் பார்த்து கண்ணீர் விடுகிறோம். கதறி அழுகிறோம்.

உரிமையிழந்து வரும் உறவுகளை
உணர்வுகளால் எங்கள் உயிர்களாய் பாவிப்போம்!

VSK said...

கை விட்டு விட வில்லை
வகை தெரியாமல் விழிக்கின்றோம்

கண்ணில் படாமல் போகவில்லை
கருத்தழிந்து நிற்கின்றோம்

மண்ணில் பிறந்தோரை மட்டுமே நினைந்து
மண்ணில் இல்லா மற்றவரை மறந்து விட்டோம்

பாதகம் செய்திடும் பாவியரை இங்கு
ஏதும் செய்ய வியலாது தவிக்கின்றோம்

உங்கள் சாவில் உருகி நிற்கும் வேளையினில்
எங்கள் மேல் சாபம் விழுவதையும் உணர்கின்றோம்!

உங்கள் நண்பன்(சரா) said...

//செத்துப் போகவே பிறந்த இனமென்று
செய்வதென்ன இனிஇங்கு உள்ளதென்று

எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டால் பொதுமென்று
எண்ணி நீங்களும் கைவிட்டு விட்டீரோ //

நெஞ்சை பிசைகின்ற வரிகள்..

//ஈழத்தின் வலி புரிகிறது; வழி தெரியாமல் விழிக்கிறோம் //
மணியனின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.


//நன்றி இயற்கை நேசி.
வலைப்பூவிலும் கைவிட்டு விட்டார்களோ என்று நினைத்தேன்.
இல்லை! //

இதற்க்கு என்ன அர்த்தம்?
உன்களைப் பற்றிய சகோதரத்துவ சிந்தனை எங்களுக்கு இல்லையென்றா?
யாரே ஒரு சிலரை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் எப்படி எல்லோரையும் சொல்லாம்?


இதைப் பற்றிய ஒரு பதிவு எழுதலாம் என்று இருக்கின்றேன்.
எழுதியதும் கண்டிப்பாக இங்கு மீண்டும் வந்து அதற்க்கான சுட்டியை தருவேன்.


அன்புடன்...
சரவணன்.

தமிழினி said...

நன்றி ஈழபாரதி, தங்கள் வாழ்த்துகளுக்கமைய என்றும் எம்பணி தொடரும்.

தமிழினி said...

நன்றி SK, பாசத்துடன் அணைத்த உங்கள் பதிவு, துவண்டு கிடக்கும் எங்களை தூக்கி நிறுத்துகிறது. தங்கள் பதிவு கண்டு மனம் தளதளக்கிறது, எங்கள் இருப்பை உறுதிசெய்யும் ஆதரவுக் கரம் ஒன்று உங்கள் வடிவில் தெரிகிறது. நன்றிகள் பலப்பல.

உங்கள் நண்பன்(சரா) said...

வணக்கம் தமிழினி அவர்களே...
நான் நினைத்ததை என் அருமை புலவர் நண்பர் SK மிகவும் தெளிவாக கூறியுள்ளார்
//பாதகம் செய்திடும் பாவியரை இங்கு
ஏதும் செய்ய வியலாது தவிக்கின்றோம்,
எங்கள் மேல் சாபம் விழுவதையும் உணர்கின்றோம்//

அடடா.. இந்த வரிகள் உண்மை, உண்மை

இது பற்றி நான் எழுதிய பதிவிற்க்கான சுட்டி இதோ

http://unkalnanban.blogspot.com/2006/07/blog-post_24.html

நிச்சயமாக இது உங்களை மனதில் கொண்டு எழுதவில்லை, எனது கருத்து அவ்வளவே,


அன்புடன்...
சரவணன்.

தமிழினி said...

நண்பன் சரவணன் அவர்களே, தங்கள் பின்னூட்டம் கண்டு கண்களில் கண்ணீர்! கடல் கடந்து, பல மைல் கடந்து ஒருவரை ஒருவர் இறுக்க அணைத்துக்கொண்ட உணர்வு, எப்படி இணைக்கிறது தமிழ் எங்களை பாருங்கள். உங்களுக்கெல்லாம் நன்றிகள் சாதாரணமாக வார்த்தையில் சொல்லிவிட இயலாது நண்பா! இல்லை இல்லை இப்போது சகோதரனாகவே உணர்கிறேன்.

தமிழினி said...

சரவணன் அவர்கள் எம் தமிழ் உறவுகள், எம்தமிழ் நாட்டில், அவர்களின் மனஉணர்வுகளை தனது வலைப்பூவிலே பதிவாக்கியுள்ளார். நன்றிகள் சரவணன்.
கை விட்டு விடவில்லை தோழா-வழி தெரியாமல் விழிக்கின்றோம்

உங்கள் நண்பன்(சரா) said...

//உங்களுக்கெல்லாம் நன்றிகள் சாதாரணமாக வார்த்தையில் சொல்லிவிட இயலாது நண்பா! இல்லை இல்லை இப்போது சகோதரனாகவே உணர்கிறேன்.//

இத, இத இதத் தானே எதிர்பார்த்தேன்.


//கடல் கடந்து, பல மைல் கடந்து ஒருவரை ஒருவர் இறுக்க அணைத்துக்கொண்ட உணர்வு,//

நானும் இதை உணர்கிறேன் சகோதரனே..


அன்புடன்...
சரவணன்.

ப்ரியன் said...

கைவிடவில்லை சோதர
கைக்கட்டியும் இல்லை - வழியறியாது
இதய வலியோடு
கைப்பிசைந்தபடி நிற்கின்றோம்.

எம் தலைவன்கள் எல்லாம்
தம் பதவி தப்பி பிழைக்க
தமையரை காத்து நிற்க
மறந்தனர்

பத்திரிக்கைகள் பத்திப்பத்தியாய்
கள்ளக்காதல் எழுதினர் - காரியமாய்
தூரத்தில் துயரும் மக்களும்
தமிழர் என மறந்தனர்

ஈழத்தின் உண்மை பிரச்சினை என்னவென
அறிந்த மக்கள் மட்டும்
மனம் குமறி நிற்கின்றோம்
பொறுமையோடு காத்திருக்கின்றோம்

பொறுமைக்கும் எல்லையுண்டு - அந்த
எல்லையும் வெகுதூரத்தில் இல்லை.

ஈழத்தின் விடிவும் வெகுதூரத்தில் இல்லை!

தமிழினி said...

நாமக்கல் சிபி அவர்களே, உங்கள் மனிதாபிமானம் தங்களின் எழுத்தினில் தெரிகிறது, ஏதிலி என எண்ணும் எம் மனதில் சிறிது நம்பிக்கை கொடுக்கிறது, இப்படிப்பட்ட உறவுகள் எங்களுக்கு இருக்கும் வரை நாமும் ஒருகாலத்தில் நிம்மதியாய் வாழலாம் என்று. நன்றி சகோதரரே.

தமிழினி said...

//பொறுமைக்கும் எல்லையுண்டு - அந்த
எல்லையும் வெகுதூரத்தில் இல்லை.

ஈழத்தின் விடிவும் வெகுதூரத்தில் இல்லை! //

நன்றி ப்ரியன். உங்கள் வாக்கு விரைவில் பலிக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம்.

கசி said...

வருத்தமாக இருக்கிறது.

கானா பிரபா said...

வணக்கம் தமிழினி

நெஞ்சைத் தொடும் கவிதை, நேற்று என் வானொலி நிகழ்ச்சியில் இதனைச் சேர்த்திருந்தேன், நேயர்கள் பலர் உணர்வோடு பாராட்டியிருந்தார்கள்.